Saturday, January 2, 2010

போகாதே! போகாதே! என் கணவா!

2099 - டிசம்பர் மாதம் 30 ந்தேதி
“என்னங்க இதெல்லாம் உங்களுக்குத் தேவையா?” கண்களில் கண்ணீருடன் கணவனை நோக்கினாள் ஹேமா.

“இதுதான் என்னோட வாழ்க்கையின் லட்சியம். ஐந்து வருடமா ஆராய்ச்சி செய்து இப்பதான் எல்லாம் கைகூடி வருது. இதுக்கு பலபேர் போட்டி போட்டும் கடைசியில் நான் தான் ஜெயிச்சேன்” பெருமிதமாக கூறினான் 30 வயதே ஆன விக்னேஷ்.

“இதாங்க வெற்றி? பிள்ளைகளையும், என்னையும் நிரந்தரமாக பிரிந்து செல்வதா வெற்றி?”
”கவலைப்படாத ஹேமா! அரசாங்கம் உனக்கும், பிள்ளைகளுக்கும் தேவையான எல்லா வசதிகளையும் செய்து தரும்”

பிள்ளைகள் இரண்டும் ஒன்றும் விளங்காமல் அப்பாவையும், அம்மாவையும் பார்த்துக் கொண்டிருந்தன.

“பணமாங்க வாழ்க்கை! எனக்கும், என் பிள்ளைகளுக்கும் நீங்கதாங்க முக்கியம். நீங்க இல்லாத வாழ்க்கையை நினைத்துக் கூட பார்க்க முடியலைங்க”

“இப்ப உனக்கு 27 வயசு தான ஆகுது? நான் போனதும் வேற ஒரு கல்யாணம் முடிச்சுக்க. உன் அழகுக்கும், அறிவுக்கும் என்னைவிட நல்ல கணவன் கிடைப்பான். கவலைப்படாதே இன்று தான் நாம் இருவரும் சேர்ந்திருக்கும் கடைசி இரவு. நிம்மதியா தூங்கு”

விளக்கை அணைத்து விட்டு விக்னேஷ் தூங்கிப் போக ஹேமாவின் விசும்பல் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.

2100 ஜனவரி 1

இந்திய ஜனாதிபதி, இந்தியப் பிரதமர், அமெரிக்கா சார்பில் இந்தியாவை கண்காணிக்கும் தூதர், முக்கிய அரசியல் தலைவர்கள், முக்கிய நபர்கள் அனைவரும் அந்த பெரிய ஹாலில் கூடி இருந்தனர். ஹேமா சிவந்த கண்களுடன் தனது இரண்டு பிள்ளைகளுடன் நின்று கொண்டிருந்தாள். அரசியல் தலைவர்கள் அனைவரும் அவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஹேமாவிடம் வந்த போது விக்னேஷால் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள இயலவில்லை. மனைவியையும் மகன்களையும் கட்டியணைத்து கதற ஆரம்பித்து விட்டான். மூத்த மகன் நடப்பது புரியாமல் “ அப்பா! நீங்க போய் போன் கூட பண்ண முடியாதா?”

“இரண்டு நாள் வரை போன் செய்யலாம். அதற்குப் பிறகு முடியாதுடா செல்லம்” என்று சொல்லி விட்டு மீண்டும் அழத் தொடங்கினான்.

வெள்ளைக் கோட் அணிந்திருந்த ஒரு விஞ்ஞானி மெதுவாக விக்னேஷிடம் வந்து “ விக்னேஷ் மனதைத் தேற்றிக் கொள்! நேரமாகிவிட்டது. கிளம்பலாம்” என்று கூறிய உடன் சுய நினைவு வந்தவனாய் எழுந்து, அனைவருக்கும் கை காட்டிக் கொண்டே கண்ணாடி அறைக்குள் நுழைய கதவு பூட்டிக் கொண்டது. அறைக்குள் தனக்கான ஆடைகளை அணிந்து விக்னேஷ் தயாரானான்.

ஹேமா குழந்தைகள் உள்பட அங்கிருந்தவர்கள் அனைவரும் அந்த ஹாலை விட்டு வெளியே வர அடுத்த சில மணி நேரங்களில் அந்த ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து ராக்கெட் புறப்பட்டுச் சென்றது. அந்த ராக்கெட்டில் விக்னேஷ் அமர்ந்திருந்தான்.

அந்த ராக்கெட் பூமியில் இருந்து பல லட்சம் மைல் தூரத்தில் இருக்கும் வேகா கிரகத்திற்கு ஆராய்ச்சிக்காக சென்று கொண்டிருக்கின்றது. நமது சூரிய குடும்பத்தில் இருந்து வெகு தொலைவில் இருக்கும் அங்கு ஒளியின் வேகத்தில் செல்லும் இந்த ராக்கெட் சென்று சேரவே சில ஆண்டுகள் ஆகும். பின்னர் ஆராய்ச்சிகள் முடிந்து திரும்பும் போது விக்னேஷூக்கு 55 வயதுகள் ஆகி இருக்கும். ஆனால் பூமியின், வேகாவின் பால்வெளி மாறுபாடுகளால் பூமியில் 2310 ஆம் ஆண்டு நடந்து கோண்டிருக்கும். விக்னேஷின் கைக்கடிகாரம் 25 ஆண்டுகளை மட்டும் கடந்திருக்க பூமியில் 310 ஆண்டுகள் கடந்திருக்கும்.

Read more...

கள் வெறி எப்படி இருக்கும் ?

பாரதி.. இந்த பேரைக் கேட்டாலே நிறைய பேருக்கு மனதிற்குள் ஒரு குதுகலிப்பு வந்துவிடும். தமிழ் அறிந்தவர்களுக்கு பாரதியைப் பற்றிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அதனால் இது பாரதியைப் பற்றியப் பதிவு அல்ல... ;-) வேற என்ன? வாங்க சொல்றேன். கள்ளு குடிச்சு இருக்கீங்களா? அதன் போதை என்றால் என்னவென்று தெரியுமா? அது குடிச்சா எப்படி வெறி வரும். குடிச்சு பழக்கம் உள்ளவங்க அதை நினைச்சுக்கங்க... குடிக்காதவங்க அதைக் கற்பனையை தட்டி விட்டு வெறி ஏற்றும் போதையை நினைச்சுக்கங்க..

அப்படியே வடகரை வேலன் அண்ணாச்சியின் இந்த பதிவைப் படிங்க.. ஆச்சா? இனி நம்ம மேட்டருக்குப் போகலாம். சின்ன குழந்தைகளைப் பார்க்கும் போது மனம் அப்படியே பரவசமடையும். பஸ்ஸ்ல், இரயிலில் போகும் போது சிறு குழந்தைகள் சிரிக்கும் போது அப்படியே அள்ளி அணைத்துக் கொள்ள வேண்டும் போல் தோன்றும். மனித மனம் உள்ள எல்லாருக்கும் இது இயற்கை தான்.

அப்படியே இதில் இன்னும் கொஞ்சம் உள்ளே நுழைந்தால் பெற்றவர்களைக் காட்டிலும் தாத்தா-பாட்டிகளுக்கு பேரப் பிள்ளைகளின் மீது பாசமும், கொஞ்சுதலும் மிக அதிகமாக இருக்கும். குழந்தையின் தந்தை இளம் வயதாக இருப்பார். தொழில், வேலை என்று ஆயிரத்தெட்டு டென்சன் இருப்பதாக அவராகவே மனதிற்குள் நினைத்துக் கொள்வார். பெற்ற பிள்ளையை தூக்கிக் கொஞ்சாத நிறைய அப்பாக்களைப் பார்த்து இருக்கின்றேன்.

அதே போல் அம்மாவுக்கும் குழந்தை மீது அதீத பாசம் இருந்தாலும், கொஞ்சுதல் என்பது கொஞ்சம் குறைவு தான். சிறு பிராயத்தில் எப்போதுமே தன்னுடனே வைத்து இருப்பதாலும், அவ்வப்போது மலம், ஜலம் பிரச்சினைகள், தூங்கினால் நாம கொஞ்சம் ஓய்வு எடுக்கலாமே என்ற எண்ணங்களாலும் கவனிப்பு இருக்கும் அதே நேரம் கொஞ்சம் குறைவாகவே இருக்கும். கொஞ்சம் பெரிதானதும் வழக்கமான பெற்றோர்களின் ’கண்டிப்பு’ காரணாமாக கொஞ்சல் என்பது குறைந்து விடுகின்றது.

கொஞ்சம் வயதானதும் இதை ரியலைஸ் செய்து பார்க்க முடிகின்றது அவர்களால்.. அப்போது அவர்கள் தாத்தா அல்லது பாட்டியாக மாறி இருக்கும் கட்டமாக இருக்கின்றது. ஓடி ஓடி களைத்து விட்டு இருக்கின்றனர். தமது இளம் வயதில் கொஞ்சாத கொஞ்சல்களை முதிய வயதில் கொஞ்ச ஆரம்பிக்கின்றனர்.

ஒரு சுவையான செய்தி.. சமீபத்தில் நண்பர் கானாபிரபாவின் சிட்னி தமிழ் வானொலி ஒளிபரப்பை இணைய வழியாக கேட்டுக் கொண்டு இருந்த போது ஒரு பெண்மணி வானலை ஊடாக வந்தார். அன்றைய நிகழ்ச்சி மகாகவி பாரதி பற்றியதாக இருந்தது. அந்த அம்மணி தனது பேரப் பிள்ளைகளைக் கொஞ்சுவதைப் பற்றி கூறும் போது பாரதியின் சின்னஞ் சிறு கிளியே பாட்டைப் பற்றி குறிப்பிட்டு விட்டு இந்தவரியை நினைவு கூர்ந்தார்.
“கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி”

இவ்வரி தமக்கு வெகுவாக பொருந்துவதாக கூறினார். தனது பேரப்பிள்ளைகளைக் கொஞ்சும் போது கண்ணு மண்ணு தெரியாமல் என்று சொல்வேமே அது போல் கொஞ்சுவதாகக் கூறினார். இதனால் தனது மகளுக்கும், அவருக்கும் பிணக்கு கூட வருமாம். பிள்ளையை அம்மாவிடம் கொடுத்தால் கொஞ்சுகிறேன் என்று கசக்கி,பிசக்கி விடுவதாக குற்றச்சாட்டாம்..



ஆம்.. குழந்தைகளைக் கொஞ்சும் போது அவர்கள் பாசத்தின் உச்சியில் இருக்கின்றனர். இதைப் பாரதி சொல்லும் போது கள்வெறியோடு ஒப்பிடுகின்றான். பாரதி கள் குடித்தானா இல்லையா என்பதோ, சிறு பிள்ளைகளிடம் பாடும் போது கள் பற்றி ஏன் சொன்னான் என்பதோ இங்கு வழக்கல்ல... ஆனால் அவன் கூறிய உவமையைப் பாருங்கள். ஒரே வரிதான்.. குழந்தைகளைக் கொஞ்சுவது ஒரு வெறி.



கள்வெறிக்கு ‘நற்குடி’ போல் விளக்கமெல்லாம் சொல்ல இயலாது. அது குடித்தவன் அடையும் வெறியா என்பதோ, குடித்தவனைக் காணும் போது மற்றவர்கள் அடையும் வெறியா என்பதும் தெரியாது. மனதிற்குள் இருக்கும் அகம்பாவங்களையும், நான் குழந்தையைக் கொஞ்சுவதா என்ற திமிரையும் உடைப்பில் போட்டும் குழந்தைகளை முழு மனதுடன் கொஞ்சும் போது ஒரு வெறி வருகின்றதா என்று அடுத்த முறை பாருங்கள்..

அப்படியே ரெண்டு குறளையும் சொல்லி விடுகின்றேன்.

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. 65

குழந்தைகளை தொட்டு தூக்கி அவர்களுடன் ஒட்டி உறவாடுவது தான் உடலுக்கான இன்பன். அவர்களுடைய இனிமையான சொற்களைக் கேட்பதுதான் காதுக்கான இன்பம்.

குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர். 66


குழந்தைகளுடைய அழகான மழலை மொழியைக் கேட்காம இருப்பாங்களே அவங்கதான்., குழல் இசை ரொம்ப சூப்பரா இருக்கு, யாழின் இசை சூப்பரா இருக்கு அப்படின்னு சொல்லுவாங்க.

டிஸ்கி : ரொம்ப நாள் எழுதாதனால் வழவழ கொழகொழன்னு வருது.. மன்னிச்சு படிங்க மக்களே.

படம் நன்றி : ப்ளிக்கர் தளம்

Read more...

About This Blog

About This Blog

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP