Saturday, January 2, 2010

போகாதே! போகாதே! என் கணவா!

2099 - டிசம்பர் மாதம் 30 ந்தேதி
“என்னங்க இதெல்லாம் உங்களுக்குத் தேவையா?” கண்களில் கண்ணீருடன் கணவனை நோக்கினாள் ஹேமா.

“இதுதான் என்னோட வாழ்க்கையின் லட்சியம். ஐந்து வருடமா ஆராய்ச்சி செய்து இப்பதான் எல்லாம் கைகூடி வருது. இதுக்கு பலபேர் போட்டி போட்டும் கடைசியில் நான் தான் ஜெயிச்சேன்” பெருமிதமாக கூறினான் 30 வயதே ஆன விக்னேஷ்.

“இதாங்க வெற்றி? பிள்ளைகளையும், என்னையும் நிரந்தரமாக பிரிந்து செல்வதா வெற்றி?”
”கவலைப்படாத ஹேமா! அரசாங்கம் உனக்கும், பிள்ளைகளுக்கும் தேவையான எல்லா வசதிகளையும் செய்து தரும்”

பிள்ளைகள் இரண்டும் ஒன்றும் விளங்காமல் அப்பாவையும், அம்மாவையும் பார்த்துக் கொண்டிருந்தன.

“பணமாங்க வாழ்க்கை! எனக்கும், என் பிள்ளைகளுக்கும் நீங்கதாங்க முக்கியம். நீங்க இல்லாத வாழ்க்கையை நினைத்துக் கூட பார்க்க முடியலைங்க”

“இப்ப உனக்கு 27 வயசு தான ஆகுது? நான் போனதும் வேற ஒரு கல்யாணம் முடிச்சுக்க. உன் அழகுக்கும், அறிவுக்கும் என்னைவிட நல்ல கணவன் கிடைப்பான். கவலைப்படாதே இன்று தான் நாம் இருவரும் சேர்ந்திருக்கும் கடைசி இரவு. நிம்மதியா தூங்கு”

விளக்கை அணைத்து விட்டு விக்னேஷ் தூங்கிப் போக ஹேமாவின் விசும்பல் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.

2100 ஜனவரி 1

இந்திய ஜனாதிபதி, இந்தியப் பிரதமர், அமெரிக்கா சார்பில் இந்தியாவை கண்காணிக்கும் தூதர், முக்கிய அரசியல் தலைவர்கள், முக்கிய நபர்கள் அனைவரும் அந்த பெரிய ஹாலில் கூடி இருந்தனர். ஹேமா சிவந்த கண்களுடன் தனது இரண்டு பிள்ளைகளுடன் நின்று கொண்டிருந்தாள். அரசியல் தலைவர்கள் அனைவரும் அவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஹேமாவிடம் வந்த போது விக்னேஷால் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள இயலவில்லை. மனைவியையும் மகன்களையும் கட்டியணைத்து கதற ஆரம்பித்து விட்டான். மூத்த மகன் நடப்பது புரியாமல் “ அப்பா! நீங்க போய் போன் கூட பண்ண முடியாதா?”

“இரண்டு நாள் வரை போன் செய்யலாம். அதற்குப் பிறகு முடியாதுடா செல்லம்” என்று சொல்லி விட்டு மீண்டும் அழத் தொடங்கினான்.

வெள்ளைக் கோட் அணிந்திருந்த ஒரு விஞ்ஞானி மெதுவாக விக்னேஷிடம் வந்து “ விக்னேஷ் மனதைத் தேற்றிக் கொள்! நேரமாகிவிட்டது. கிளம்பலாம்” என்று கூறிய உடன் சுய நினைவு வந்தவனாய் எழுந்து, அனைவருக்கும் கை காட்டிக் கொண்டே கண்ணாடி அறைக்குள் நுழைய கதவு பூட்டிக் கொண்டது. அறைக்குள் தனக்கான ஆடைகளை அணிந்து விக்னேஷ் தயாரானான்.

ஹேமா குழந்தைகள் உள்பட அங்கிருந்தவர்கள் அனைவரும் அந்த ஹாலை விட்டு வெளியே வர அடுத்த சில மணி நேரங்களில் அந்த ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து ராக்கெட் புறப்பட்டுச் சென்றது. அந்த ராக்கெட்டில் விக்னேஷ் அமர்ந்திருந்தான்.

அந்த ராக்கெட் பூமியில் இருந்து பல லட்சம் மைல் தூரத்தில் இருக்கும் வேகா கிரகத்திற்கு ஆராய்ச்சிக்காக சென்று கொண்டிருக்கின்றது. நமது சூரிய குடும்பத்தில் இருந்து வெகு தொலைவில் இருக்கும் அங்கு ஒளியின் வேகத்தில் செல்லும் இந்த ராக்கெட் சென்று சேரவே சில ஆண்டுகள் ஆகும். பின்னர் ஆராய்ச்சிகள் முடிந்து திரும்பும் போது விக்னேஷூக்கு 55 வயதுகள் ஆகி இருக்கும். ஆனால் பூமியின், வேகாவின் பால்வெளி மாறுபாடுகளால் பூமியில் 2310 ஆம் ஆண்டு நடந்து கோண்டிருக்கும். விக்னேஷின் கைக்கடிகாரம் 25 ஆண்டுகளை மட்டும் கடந்திருக்க பூமியில் 310 ஆண்டுகள் கடந்திருக்கும்.

Read more...

கள் வெறி எப்படி இருக்கும் ?

பாரதி.. இந்த பேரைக் கேட்டாலே நிறைய பேருக்கு மனதிற்குள் ஒரு குதுகலிப்பு வந்துவிடும். தமிழ் அறிந்தவர்களுக்கு பாரதியைப் பற்றிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அதனால் இது பாரதியைப் பற்றியப் பதிவு அல்ல... ;-) வேற என்ன? வாங்க சொல்றேன். கள்ளு குடிச்சு இருக்கீங்களா? அதன் போதை என்றால் என்னவென்று தெரியுமா? அது குடிச்சா எப்படி வெறி வரும். குடிச்சு பழக்கம் உள்ளவங்க அதை நினைச்சுக்கங்க... குடிக்காதவங்க அதைக் கற்பனையை தட்டி விட்டு வெறி ஏற்றும் போதையை நினைச்சுக்கங்க..

அப்படியே வடகரை வேலன் அண்ணாச்சியின் இந்த பதிவைப் படிங்க.. ஆச்சா? இனி நம்ம மேட்டருக்குப் போகலாம். சின்ன குழந்தைகளைப் பார்க்கும் போது மனம் அப்படியே பரவசமடையும். பஸ்ஸ்ல், இரயிலில் போகும் போது சிறு குழந்தைகள் சிரிக்கும் போது அப்படியே அள்ளி அணைத்துக் கொள்ள வேண்டும் போல் தோன்றும். மனித மனம் உள்ள எல்லாருக்கும் இது இயற்கை தான்.

அப்படியே இதில் இன்னும் கொஞ்சம் உள்ளே நுழைந்தால் பெற்றவர்களைக் காட்டிலும் தாத்தா-பாட்டிகளுக்கு பேரப் பிள்ளைகளின் மீது பாசமும், கொஞ்சுதலும் மிக அதிகமாக இருக்கும். குழந்தையின் தந்தை இளம் வயதாக இருப்பார். தொழில், வேலை என்று ஆயிரத்தெட்டு டென்சன் இருப்பதாக அவராகவே மனதிற்குள் நினைத்துக் கொள்வார். பெற்ற பிள்ளையை தூக்கிக் கொஞ்சாத நிறைய அப்பாக்களைப் பார்த்து இருக்கின்றேன்.

அதே போல் அம்மாவுக்கும் குழந்தை மீது அதீத பாசம் இருந்தாலும், கொஞ்சுதல் என்பது கொஞ்சம் குறைவு தான். சிறு பிராயத்தில் எப்போதுமே தன்னுடனே வைத்து இருப்பதாலும், அவ்வப்போது மலம், ஜலம் பிரச்சினைகள், தூங்கினால் நாம கொஞ்சம் ஓய்வு எடுக்கலாமே என்ற எண்ணங்களாலும் கவனிப்பு இருக்கும் அதே நேரம் கொஞ்சம் குறைவாகவே இருக்கும். கொஞ்சம் பெரிதானதும் வழக்கமான பெற்றோர்களின் ’கண்டிப்பு’ காரணாமாக கொஞ்சல் என்பது குறைந்து விடுகின்றது.

கொஞ்சம் வயதானதும் இதை ரியலைஸ் செய்து பார்க்க முடிகின்றது அவர்களால்.. அப்போது அவர்கள் தாத்தா அல்லது பாட்டியாக மாறி இருக்கும் கட்டமாக இருக்கின்றது. ஓடி ஓடி களைத்து விட்டு இருக்கின்றனர். தமது இளம் வயதில் கொஞ்சாத கொஞ்சல்களை முதிய வயதில் கொஞ்ச ஆரம்பிக்கின்றனர்.

ஒரு சுவையான செய்தி.. சமீபத்தில் நண்பர் கானாபிரபாவின் சிட்னி தமிழ் வானொலி ஒளிபரப்பை இணைய வழியாக கேட்டுக் கொண்டு இருந்த போது ஒரு பெண்மணி வானலை ஊடாக வந்தார். அன்றைய நிகழ்ச்சி மகாகவி பாரதி பற்றியதாக இருந்தது. அந்த அம்மணி தனது பேரப் பிள்ளைகளைக் கொஞ்சுவதைப் பற்றி கூறும் போது பாரதியின் சின்னஞ் சிறு கிளியே பாட்டைப் பற்றி குறிப்பிட்டு விட்டு இந்தவரியை நினைவு கூர்ந்தார்.
“கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி”

இவ்வரி தமக்கு வெகுவாக பொருந்துவதாக கூறினார். தனது பேரப்பிள்ளைகளைக் கொஞ்சும் போது கண்ணு மண்ணு தெரியாமல் என்று சொல்வேமே அது போல் கொஞ்சுவதாகக் கூறினார். இதனால் தனது மகளுக்கும், அவருக்கும் பிணக்கு கூட வருமாம். பிள்ளையை அம்மாவிடம் கொடுத்தால் கொஞ்சுகிறேன் என்று கசக்கி,பிசக்கி விடுவதாக குற்றச்சாட்டாம்..



ஆம்.. குழந்தைகளைக் கொஞ்சும் போது அவர்கள் பாசத்தின் உச்சியில் இருக்கின்றனர். இதைப் பாரதி சொல்லும் போது கள்வெறியோடு ஒப்பிடுகின்றான். பாரதி கள் குடித்தானா இல்லையா என்பதோ, சிறு பிள்ளைகளிடம் பாடும் போது கள் பற்றி ஏன் சொன்னான் என்பதோ இங்கு வழக்கல்ல... ஆனால் அவன் கூறிய உவமையைப் பாருங்கள். ஒரே வரிதான்.. குழந்தைகளைக் கொஞ்சுவது ஒரு வெறி.



கள்வெறிக்கு ‘நற்குடி’ போல் விளக்கமெல்லாம் சொல்ல இயலாது. அது குடித்தவன் அடையும் வெறியா என்பதோ, குடித்தவனைக் காணும் போது மற்றவர்கள் அடையும் வெறியா என்பதும் தெரியாது. மனதிற்குள் இருக்கும் அகம்பாவங்களையும், நான் குழந்தையைக் கொஞ்சுவதா என்ற திமிரையும் உடைப்பில் போட்டும் குழந்தைகளை முழு மனதுடன் கொஞ்சும் போது ஒரு வெறி வருகின்றதா என்று அடுத்த முறை பாருங்கள்..

அப்படியே ரெண்டு குறளையும் சொல்லி விடுகின்றேன்.

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. 65

குழந்தைகளை தொட்டு தூக்கி அவர்களுடன் ஒட்டி உறவாடுவது தான் உடலுக்கான இன்பன். அவர்களுடைய இனிமையான சொற்களைக் கேட்பதுதான் காதுக்கான இன்பம்.

குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர். 66


குழந்தைகளுடைய அழகான மழலை மொழியைக் கேட்காம இருப்பாங்களே அவங்கதான்., குழல் இசை ரொம்ப சூப்பரா இருக்கு, யாழின் இசை சூப்பரா இருக்கு அப்படின்னு சொல்லுவாங்க.

டிஸ்கி : ரொம்ப நாள் எழுதாதனால் வழவழ கொழகொழன்னு வருது.. மன்னிச்சு படிங்க மக்களே.

படம் நன்றி : ப்ளிக்கர் தளம்

Read more...

Thursday, December 31, 2009

2009 ல் இருந்து 2010 ஐ நோக்கி ஒரு ஓட்டம்

2009 ஆம் ஆண்டு கடந்து விட்டது.2010 ம் பிறந்து விட்டது. வருடம் ஒன்றுடன் வயதும் கூடி விட்டது. திரும்பிப் பார்க்க இயலாத வகையிலேயே 2009 கடந்து இருக்கின்றது. அதி வேகம் என்றே சொல்லலாம். 2009 ஆரம்பத்தில் இந்தியாவில் இருந்தேன். மீண்டும் செப்டம்பரில் இந்தியாவில் இருந்தேன். வழக்கம் போல் விடுமுறைகள் எப்பவும் போல வேகமாகவே கழிகின்றன. முதல் முறையாக முகம் தெரியாமல் பழகிய பதிவர்களை சந்திக்க கிடைத்த வாய்ப்புகள் மகிழ வைத்தன.

மதுரையில் சீனா சார், செல்வி ஷங்கர் அம்மா வீட்டிற்கு மனைவி, மகனுடன் சென்றது மிக மகிழ்ச்சியளித்த நாள். அதே போல் கோவையில் வடகரை வேலன், சஞ்சய், பரிசல், வெயிலான், கார்க்கி, கும்க்கி இவர்களுடன் கழித்த நாளும்.. இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டு இருப்பதே எனக்கு சுகமாகப் பட்டது. நன்றிகள் நண்பர்களே.

மற்ற ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது 2009 சிறப்பாகவே சென்றது. 2007 ல் குடும்பத்தில் நிலவிய கடும் குழப்பங்கள் 2008 ல் மங்கி, 2009 ல் குறைந்து விட்டன. நீறு பூத்த நெருப்பாக இருக்குமோ என்று தெரியவில்லை.. ;-)) ஆனாலும் சரிபாதியுடன் எந்த பிணக்கும் இல்லாத வருடம் என்பதால் மகிழ்ச்சியே.

சென்ற வருடத்தின் கடைசிப் பகுதிகள் மிக விரைவாக சென்று விட்டன. சென்ற வருடம் பதிவுகளும் மனதுக்கு திருப்தியடையும் வகையில் எழுதவில்லை. வேலைப் பளு அதிகமானதால் எழுதும் வாய்ப்புகளும் குறைந்து போய் விட்டன. மனதிற்குள் தோன்றி எழுத முடியாமல அல்லது ஓரிரு பாராக்களுடன் டிராப்ட்டிலேயே கலைந்து போன பதிவுகளும், சிறுகதைகளும் ஏராளம்.

மகள் பிறக்கும் நேரம் இந்தியாவில் இருந்தது மிக மகிழ்ச்சி அளித்த தருணம். அதன்பின் வேலை மாற்றத்தின் விளைவாக சவுதியில் இருந்து கத்தார் வர நேர்ந்து விட்டது. வேலை மாற்றத்துடன் பொருளாதார ரீதியாகவும் நல்ல மாற்றம் என்று சொல்லலாம். சென்ற வருட ஆரம்பத்தில் ஆரம்பித்த வீட்டு வேலை இதோ, அதோ என்று இந்த ஆண்டும் தொடர்கின்றது. இன்னும் விரல்விட்டு எண்ணக் கூடிய தினங்களில் முடிந்து விடுமாம்.

வீட்டு வேலை முடிந்ததும் அப்பாடா என்று இருக்குமா என்று தெரியவில்லை. ஏனைனில் இவ்வீடு எனது கனவு இல்லமாக அமையவில்லை என்பது முதல் காரணம். என் காதலியுடன் கனவில் வாழ்ந்த அந்த கனவு இல்லம் அமைக்க இவ்வீட்டை கட்ட செலவு செய்ததைப் போல நான்கு மடங்கு பணம் வேண்டுமாம்... எனவே இவ்வீட்டுடன் திருப்தி அடைந்து கொள்ள வேண்டியது தான் போல... ;-))

2008 உடைய கடைசியில் நினைத்தது போல 2009 லும் எந்த நூலையும் வாங்கவில்லை. இந்த ஆண்டாவது வருமானத்தின் ஒரு பகுதியில் நூல்களை வாங்க வேண்டும். இந்த நேரத்தில் என் துணைவியிடம் ’ஒரு வீட்டில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புக்காவது புத்தகங்கள் இருக்க வேண்டும்’ என்று சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்டது நினைவுக்கு வருகின்றது. அதுக்கெல்லாம் அஞ்ச முடியுமா? இனியாவது புத்தகங்களை சேகரிக்க துவங்க வேண்டும்.

வேறு 2010 க்கு என்று எந்த லட்சியங்களும், தீர்மானமும் இல்லை. வாழ்க்கையில் ஓட்டத்திலேயே துடுப்பைப் பிடித்து ஓட்டுவோம். சென்ற நாட்களில் எனது பதிவுகளை வாசித்தும், ஊக்கமூட்டியும் வந்த அனைவருக்கும் நன்றிகள். அதே போல் என்னுடன் தோழமையுடன் பழகி எனக்கு அனைத்து நேரங்களில் உறுதுணையாகவும், அறிவுரைகளையும் நல்கி வரும் அனைவருக்கும் நன்றிகள்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Happy New Year
நன்றி : Happy New Year

Read more...

Thursday, December 24, 2009

என் காதல் தோத்துப் போச்சுங்க

நான் ரொம்ப கவலையில் இருக்கேங்க... என்னோட காதல் தோற்றுப் போய் விட்டதுங்க. என்னைத் தெரியும் தானே உங்களுக்கு.. இப்ப Mcfame Robotics Company யில் அக்கவுண்ட்ஸில் வேலை செய்றேங்க... நேத்து தாங்க என்னோட தெய்வீகக் காதல் தோல்வியில் முடிஞ்சு போச்சு. அதுவும் அந்த சுந்தர் பய என் முன்னாடியே என் காதலியை..வேணாங்க..என்னால ... முடியல.... ... யோசிச்சுப் பாருங்க. அந்த நிமிஷம் எனக்கு எப்படி இருந்து இருக்கும்ன்னு.. இப்பக் கூட என் சிஸ்டத்துல என் காதலே என் காதலே என்னை செய்யப் போகிறாய்? பாடல் தான் ஒலித்துக் கொண்டு இருக்கு.

நான் முழுக்கதையையும் முதலில் இருந்து சொல்கிறென்.. கேளுங்க.. நான் இங்க வந்து முழுசா 3 வருடமாகப் போகுதுங்க.. ஆபிஸில் சுமார் 50 பேர் வேலை செய்கின்றோம். பேக்டரில் 600 பேருக்கு மேல் இருக்காங்க. எனக்கு அக்கவுண்ட் என்பதால் ஆபிஸில் தான் முழு நேரமும் செலவாகும். இங்க 12 லேடீஸ் வேலை செய்றாங்க.. ஆனாலும் யாரையும் ஏறெடுத்துக் கூட பார்த்ததில்லை. ஏன்னா நான் என்னோட கனவு தேவதைக்காக காத்துக் கொண்டு இருந்தேன்.

மூணு மாசத்துக்கு முன்னாடி தான் அந்த கனவு தேவதையை பார்த்தேன். அதுவும் எங்க ஆபிஸிலேயே புதுசா வேலைக்கு வந்து இருக்கா.. பேரு ரேவதி. நான் அழகா ரேச்சின்னு செல்லமா பேர் வச்சு இருக்கேன்.. ரேச்சி எனக்கு நீ மச்சி! நல்லா இருக்குல்ல....நல்லா அழகா இருப்பா.. (சென்சார் செய்யப்பட்ட பகுதியை இங்க நிரப்ப முடியாது... ஆர்) மொத்தத்துல நம்ம அசின், நயன் தாரா, பழைய ஐஸ்வர்யா ராய் எல்லோரையும் சேர்த்து செஞ்ச செப்புச் சிலைன்னு வச்சுக்கங்க

எங்க நிறுவனத்தின் டிசைனிங் செக்சனில் வேலைக்கு சேர்ந்தா.. எங்களுக்கும் டிசைனிங்குக்கும் எந்த டச்சும் இல்லைன்னாலும் இரண்டும் அடுத்ததடுத்த பகுதி என்பதால் அவளை அடிக்கடி பார்க்க முடியும். அவள் வந்த முதல் நாளிலேயே எனக்கு காதல் ஜூரம் ஆரம்பமாகி விட்டது.



ஆனா அவள் என்னை ஏறிட்டுக் கூடப் பார்க்கவில்லை. எப்போதாவது வழியில் சந்தித்தால் ஒரு ஸ்மைல் மட்டும் கிடைக்கும். நானும் பல தில்லாலங்கடி வேலை பார்த்தும் திரும்பிக் கூட பார்க்கலை. இதுல என்ன கொடுமைன்னா என்னோட அழகுக்கு முன்னாடி நிக்க கூட முடியாத இன்னும் சிலர் ஜொள்ளு வடித்தது தான்.. சேல்ஸ் செக்சனில் இருக்கும் அந்த பேக்கு இருக்கானே.. கேசவன்.. அவன் எப்ப பார்த்தாலும் என் ஆளிடம் போய் இளிக்கிறதே வேலையே இருக்கான்.

அவனாவது பரவாயில்லை... அக்கவுண்ட் செக்சன் ஹெட் இருக்காரே அந்த பாலா.. காலேஜ் படிக்கிற பசங்க இருக்காங்க அவருக்கு..அந்த ஆளும் என் ரேச்சிகிட்ட எப்பப் பார்த்தாலும் ஏதாவது டவுட்டுன்னு போய் நிக்கிறார். இது அவருக்கே ஓவரா இல்லியா? வயசானாலும் இங்கிதம் தெரியலையே?

இது எல்லாத்தையும் விடக் கொடுமை... அட்மின் செக்சனில் இருக்கும் லாரன்ஸ் பண்ணுவது தான்.. பேசுவது மாதிரி பக்கத்தில் போய் உரசுவது, நடந்து வரும் போது இடிச்சிட்டு சாரி சொல்வது..இப்படி டெய்லி தொடருது. அவள் இதை எல்லாம் சாதாரணமா எடுத்துட்டு போய்டுறாரா..ஆனா என்னால் இங்க சும்மா உட்கார முடியல...மூலம் வந்தவன் மாதிரி கேபினில் இருந்து எட்டி எட்டிப் பார்த்துக்கிட்டு இருக்க வேண்டி இருக்கு.

எப்படியாவது என் காதலை அவள்கிட்ட சொல்லனும்னு வெயிலில் போட்ட புழு மாதிரி துடிச்சேன். வேலையில் கவனம் செலுத்த முடியல..சாப்பாடு சரியா இறங்கல.. சரி.. நல்லபிள்ளையா அவளோட வீட்ல போய் பொண்ணு கேக்கலாம்ன்னு வேவு வேலையில் இறங்கினேன். அப்ப ஒரு முதல் அதிர்ச்சி காத்து இருந்தது. அவள் எங்க கம்பெனி MD யின் ஸ்பெஷல் காரில் தான் சென்று வருகிறாளாம். டிரைவரை பிடித்து விசாரித்த போது அதைவிட அதிர்ச்சியைக் கொடுத்தான். தினமும் காலையில் பிக்அப் செய்வது மற்றும் டிராப் செய்வது எல்லாம் பேக்டரியை ஒட்டி இருக்கும் கம்பெனி MD யின் கெஸ்ட் அவுஸில் தானாம்.

அவள் முகத்தில் தெரியும் ஒரு வித இறுக்கம் அவளுக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என்பதை எனக்கு ஒவ்வொரு கணமும் உணர்த்திக் கொண்டு இருந்தது. அப்பதான் அந்த இறுதி முடிவை எடுத்தேன். என் ரேச்சிக்கு இந்த நரக வாழ்வில் இருந்து அவளுக்கு விடுதலை தருவது தான் அந்த முடிவு.

கம்பெனியின் இண்டர்னல் மெயில் சிஸ்டம் மூலம் அவளுக்கு என் காதலை முழுமையாகச் சொல்லி, விருப்பப்பட்டால் இந்த இயந்திர வாழ்க்கையை விட்டு எங்கள் கிராமத்திற்கு சென்று விடலாம் என்பதை சொல்லி இருந்தேன். மறக்காமல் எங்களது பூர்வீக சொத்தான 50 ஏக்கரில் விவசாயம் செய்து சந்தோசமாக வாழலாம் என்பதையும் சேர்த்து இருந்தேன்.

அன்று ஏனோ அவள் என்னைத் திரும்பிக் கூட பார்க்க வில்லை. ஆனால் மறுநாள் கம்பெனி MD என்னைத் தனது தனியறைக்கு அழைத்தார். சதிகாரி.. வசந்த சேனை..வத்தி வைத்து விட்டாள் என்பது மட்டும் புரிந்தது. MD யின் அறைக்கு சென்றால் அங்கே டிசைனிங் செக்சனின் சுந்தரும், மேலும் என் ரேச்சியும் இருந்தனர். இப்பவும் அவளது பார்வையில் எந்த கலங்கமும் இல்லை.

MD தான் விசாரணையைத் துவக்கினார். தயக்கமில்லாமல் எனது காதலை என் ரேச்சியிடம் சொன்னதை ஒத்துக் கொண்டேன். இது பார்வையில் ஆரம்பித்து இதயத்தில் முடியும் காதல் என்பதை விளக்கினேன். சிறிது நேரம் யோசித்து விட்டு அவர் சுந்தரைப் பார்க்க சுந்தர் எழுந்து வந்து என் ரேச்சியிடம் “கொஞ்சம் உன் சுடிதார் டாப்பை உயர்த்து” என்றான். டக்கென்று என் ரேச்சி டாப்பைத் தூக்க என் காதலியின் வயிற்றுப் பகுதியில் கையை செலுத்திய சுந்தர் அங்கிருந்த சிறு பின்னைப் பிடித்து இழுக்க டக்கென்று வயிற்றுப் பகுதி திறந்து கொண்டது.

நான் எட்டிப் பார்க்க உள்ளே அனைத்தும் எலெக்ட்ரானிக் போர்டுகளும் ஒயர்களுமாக இருந்தது. உள்ளே இருந்த சிறு ஸ்விட்சை அழுத்த கையைத் தூக்கியது போலவே ரேவதி நின்று கொண்டு இருந்தாள். சுத்தமான சிலிகான் மற்றும் பல வேதிப் பொருட்களின் கலவை தான் உங்கள் ரேச்சி...இவள் ஒரு ரோபாட் என்று சொன்ன சுந்தர் மீண்டும் ஸ்விட்சை அழுத்த ரேவதி கண் சிமிட்ட ஆரம்பித்து இருந்தாள். MD பெருந்தன்மையுடன் எனது தவறை மன்னிப்பதாகவும், இனி ஒழுங்காக இருக்கும் படி வார்ன் பண்னியும் அனுப்பினார். அந்த புதிய வகை ரோபாட் பெண்ணை எங்கள் கம்பெனியிலேயே டெஸ்டிங்குக்காக வைத்திருப்பதாகவும் கூறி யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று சொல்லி விட்டார்.

தளர்ந்து போய் இருக்கையில் அமரப் போனேன். ஏதோ உந்துதலில் எட்டிப் பார்க்க அங்கே அட்மின் லாரன்ஸ் வேண்டுமென்றே உரசிக் கொண்டு செல்வது தெரிந்தது. எப்போதுமே வயிறு எரிபவன் இன்று வாய்விட்டு சிரித்தேன்.

Read more...

Wednesday, December 23, 2009

நான் வாக்கப்பட்டுப் போகப் போற

1999 ல் வெளிவந்த தேசிய கீதம் படத்தில் இடம்பெற்றப் பாடல் இது. படம் கொஞ்சம் டப்பாப் படமாக இருந்ததால் இந்த பாடல் வெளியே தெரியவில்லை. சில காலம் முன்பு இப்பாடலைக் கேட்ட போது அப்படியே எங்க ஊரைக் கண்முன் கொண்டு வரும் முயற்சியில் இருக்கும். இளையராஜாவின் தேனிசையில்.. கலக்கல். திருமணம் முடிப்பதற்கு முன் இப்பாடலை என் வருங்கால மனைவியைக் கேட்கச் செய்து, ”இந்த வர்ணனைகள் உள்ள ஊருக்குத் தான் நீ வாக்கப்பட்டு வரப் போகின்றாய்” என்று கூற வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது.

நான் வாக்கப்பட்டுப் போகப் போற ஊரைப் பத்திக் கேளு...
அடி..நாலு பக்கம் தென்னங் தோப்பு, தோப்புக்குள்ள வீடு

நான் வாக்கப்பட்டுப் போகப் போற ஊரைப் பத்திக் கேளு
அடி..நாலு பக்கம் தென்னங் தோப்பு, தோப்புக்குள்ள வீடு
ஏ.. அன்னக்கிளியே.. அடி சொர்ணக்கிளியே.. அதைக் கேட்டுக்க நீ

நான் வாக்கப்பட்டுப் போகப் போற ஊரைப் பத்திக் கேளு

துள்ளும் குத்தாலக் காத்து வந்து குடி இருக்குமடி
அங்கு வைகாசி கூட இளம் குளிர் அடிக்குமடி ( நான் வாக்கப்பட்டு…)


என் போல ஆறு ஒன்னு துள்ளி துள்ளி நடக்கும்

அடி ஆத்தியம்மா இன்னும் கொஞ்சம் மேல சொல்லு

பூப்போல மேகம் வந்து சாரல் மலை தெளிக்கும்

ஆ வேரிக்குட்டி நல்லக்கதை இன்னுமு சொல்லு

புன்னை மரப் பொந்துக்குள்ள பச்சைக்கிளி கொஞ்சயிலே

கேட்கும் காதல் பேச்சு
அதைக் கேட்டா மனசே போச்சு
மாம்பூவூ வாசம் வரும் மண்ணோட நேசம் வரும்

சொன்னா அதுதான் தீராது அட இன்னமும் சொல்லுறேன் கேட்டுக்கோ

நான் சொன்னதைப் பின்னாலே பார்த்துக்கோ புதுப் பொண்ணா
நான் போகையிலே
வேடிக்கை நீ பார்க்கவா ( நான் வாக்கப்பட்டு…)

நான் வாக்கப்பட்டுப் போகப் போற ஊரைப் பத்திக் கேளு...
அடி..நாலு பக்கம் தென்னங் தோப்பு, தோப்புக்குள்ள வீடு

நான் போகும் சீமையிலே நாலு போகம் விளையும்
அடக் காதைக் கொடுத்தால் எட்டு முழம் பூவைச் சுத்துவா

நான் கை தூவி போட்ட விதை மச்சு வந்து நிறையும்
கொஞ்சம் கண்ணு அசந்தா ரொம்ப ரொம்ப ரீலைச் சுத்துவா?

நஞ்சைக்கிங்கு பஞ்சமில்லை பஞ்சத்துல யாருமில்லை

ராகம் பாடும் காத்து
மெல்ல தாளம் போடும் நாத்து
கிழக்கால வைகை அணை
யானை, மலை, தேனீ, சுனை,
பார்க்க பார்க்க திகட்டாது

அட நண்டு நடக்குற நேரத்தில்
செந்நாரை பறக்குற இடத்தில்

நான் வாழ்வேனே வாக்கப்பட்டு
வேடிக்கை நீ பார்க்க வா ( நான் வாக்கப்பட்டு…)

Get this widget | Track details | eSnips Social DNA


டிஸ்கி 1 : இப்பாடலை எனது அருமையான குரலில் பாடி பதிவேற்ற எண்ணி இருந்தேன். சிலநாட்களாக சளி பிடித்து மக்கர் செய்வதால்.. அந்த கஷ்டம் உங்களுக்கு இல்லாமல் போயிடுச்சு.

டிஸ்கி 2 : இதில் நீல நிறத்தில் இருப்பது கோரஸ் குரல்.. அதில் கணக்கில் எடுக்கக் கூடாது.. ஹிஹிஹி

டிஸ்கி 3 : மேற்கால வைகை அணை என்று வரும்.. ஆனால் எங்களுக்கு கிழக்கில் வைகை அணை இருப்பதால் கிழக்கால வைகை அணை என்று மாற்றி விட்டேன்.

Read more...

Tuesday, December 22, 2009

இலையில் சோறு போட்டு...

"ஏண்டி.. மெல்லமா நடந்து வரத் தெரியாதா?”
மாலதியின் பேச்சைக் கேட்கக் கூடியவள் இல்லை சின்னு. நடந்து வராமல் தாவித் தாவிக் குதித்துக் கொண்டு வந்து கொண்டிருந்தாள். கூடவே அவளது குட்டி நாயான டைகரும். டைகர் அவர்களது குப்பத்தில் இருந்த ஒரு நாய் போட்ட குட்டி... குட்டியிலேயே எடுத்து வந்து பாலூட்டி வளர்த்து இப்போது கறி தின்னும் அளவுக்கு வளர்ந்து விட்டது. சின்னு எங்கே சென்றாலும் கூடவே அதுவும் திரியும்.

இன்று சின்னுவின் மகிழ்ச்சிக்குக் காரணம் அவர்கள் செல்லுமிடம். மாலதி, சின்னுவின் அம்மா அந்த பகுதி கவுன்சிலர் வீட்டில் வேலை செய்கின்றார். இன்று கவுன்சிலரின் ஒரே மகனுக்கு பிறந்தநாள். அதனால் ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளார். சின்னுவின் அம்மா அங்கேயே வேலைக்கு இருப்பதால் அவளது பிள்ளைகளையும் கவுன்சிலர் மனைவி சாப்பிட வரச் சொல்லி இருந்தாள்.

சின்னு அம்மா எப்போதுமே மிச்சம் மீதிகளை கட்டிக் கொண்டு வந்து தனது பிள்ளைகளுக்கு சாப்பிடத் தருவாள். இன்று அங்கேயே சுடான சாப்பாடு கிடைக்கும் என்பதால் சின்னுவிற்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. சின்னு மூன்றாம் வகுப்பு படிக்கும் சுட்டியான மாணவி. மாலதி ஆறாம் வகுப்பு படிப்பவர். இப்போது தான் கொஞ்சம் கொஞ்மாக அவளிடம் வெட்கம் குடி கொள்ள ஆரம்பித்து இருக்கின்றது.

வானம் மேக மூட்டமாக இருந்தது. கவுன்சிலரின் வீடு கலகலப்பாக இருந்தது. மாலதியும், சின்னுவுன் வீட்டுக்கு வெளியே இருந்த முற்றத்தில் அமர்ந்து இருந்தனர். இவர்களைப் போலவே இன்னும் சில சிறுவர், சிறுமிகளும், வயதானவர்களும் அங்கே இருந்தனர். விருந்தினர்கள் எல்லாம் வீட்டிற்கும் கொண்டாட்டங்களில் மூழ்கி இருந்தனர். சின்னுவின் அம்மா அவ்வப்போது வீட்டினுள் இருந்து மகள்களை ஒரு ஏக்கப் பெருமூச்சுடன் பார்த்துக் கொண்டு இருந்தாள். சின்னு நைசாக வீட்டிற்குள் நுழைந்து பார்த்த போது பிரியாணி அங்கே பரிமாறப்பட்டுக் கொண்டு இருப்பது தெரிந்ததால் சின்னு அவ்வப்போது மூச்சை இழுத்து வாசம் பிடித்துக் கொண்டு இருந்தாள்.

இப்போது முற்றம் பரபரப்பாக இருந்தது. அங்கிருந்தவர்கள் அனைவரும் வரிசையாக அமர வைக்கப்பட்டு இருந்தனர். மாலதியும், சின்னுவின் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தனர். டைகரை அங்கிருந்த குரோட்டன்ஸ் செடி மறைவில் ஒளிந்து இருக்கச் செய்து இருந்தாள் சின்னு. மாலதிக்கு சின்னுவின் மீது கோபம்.. நாயைக் கூட்டி வந்தது கவுன்சிலர் மனைவிக்கு தெரிந்தால் அவ்வளவு தான் என்று.. சின்னுவிற்கு அதைப் பற்றிய கவலை இல்லை.. தனக்கு கிடைக்கும் சாப்பாட்டில் கொஞ்சம் டைகருக்கு தரப் போவதாக சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

வரிசையாக உட்கார்ந்து இருந்தவர்களுக்கு முன் இலை போடப் பட்டு இருந்தது. இலை போட வந்தவரிடம் நைச்சியமாக பேசி ஒரு கிழிந்த இலையை டைகருக்காக சின்னு வாங்கி வைத்து இருந்தாள். அவளுக்கும் உள்ளூர பயம் இருந்தது. அம்மா டைகரைப் பார்த்தால் கூட அடி பின்னி விடுவாள் என்று.. ஆனாலும் டைகர் ஒளிந்து இருக்கும் தைரியத்தில் இருந்தாள். எல்லாருக்கும் முன் இலை போடப்பட்டு இருந்தது.

அப்போது தான் பரபரப்பு நிகழ்ந்தது. அந்த பகுதி சட்டமன்ற உறுப்பினர் பிறந்தநாள் விழாவுக்கு வந்து கொண்டிருக்கிறார் என்ற செய்தி அது. கவுன்சிலரின் கைத் தடிகள் முற்றத்தில் இலை போட்டு அமர்ந்து இருந்தவர்களை விரட்டிக் கொண்டு இருந்தார்கள். அனைவரும் எழுந்து ஓரமாக நின்று கொண்டிருந்தனர். சின்னு தனது இரண்டு இலையையும் எடுத்துக் கொண்டு ஓரமாக நின்று கொண்டு இருந்தாள். அவள் கவனம் முழுவதும் டைகரின் மீதே இருந்தது. டைகர் அமைதியாக செடி மறைவிற்குள்ளேயே இருந்தது.

அடுத்த அரை மணி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர் இடத்தைக் காலி செய்ய மீண்டும் முற்றத்தில் அவரவர் இடத்தைப் பிடித்துக் கொண்டு அனைவரும் அமர்ந்தனர். அனைவரும் முன்னும் இலை இருந்தது. ஆனால் சாப்பாடு போட யாரையும் காணவில்லை. கவுன்சிலரின் மகனே வந்து தனது கையால் சாப்பாடு போட வேண்டுமாம்... இதனை வீடியோவாக எடுக்க கேமரா மேன் ஏற்பாடுகளைச் செய்து கொண்டு இருந்தார்..

சின்னுவிற்கு பசி வயிற்றைக் கிள்ளியது. கேமராமேன் வேறு ஏதோ ஒயரில் பிரச்சினை என்று இங்கும் அங்கும் அலைந்து கொண்டு இருந்தான். அவனது கேமரா தயாரானால் தான் சாப்பாடு போட ஆரம்பமாகுமாம். அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கேமரா தயாராகி இருந்தது. கவுன்சிலரின் மகன் தனது சின்னக் கரங்களால் கொஞ்சம் கொஞ்சமாக பிரியாணியை இலையில் வைத்துக் கொண்டிருந்தான். மாலதி, சின்னு இருந்த மூலைக்கு எதிர் மூலையில் இருந்து சாப்பாடு போடும் படலம் ஆரம்பமாகி இருந்தது. சின்னு அவ்வப்போது டைகரை தனது கைகளை வைத்து குரோட்டன்ஸ் செடிக்குள் தள்ளிக் கொண்டு இருந்தாள். டைகருக்கும் பிரியாணி வாசம் வந்து விட்டது போல் இருந்தது.

மாலதிக்கு ஏனோ அங்கே இருப்பது வெட்கமாக இருந்தது. ஆனால் வேறு வழி இல்லை. இடையில் எழ முடியாது. கவுன்சிலர் மனைவி பார்த்தால் அவ்வளவு தான் பத்ரகாளியாகி விடுவாள். சின்னுவின் இலைக்கு சாப்பாடு வருவதற்கும் நகரவே நகராத 15 நிமிடங்கள் கடந்து இருந்தது. சின்னுவோடு வரிசை முடிந்ததால் கேமராமேன் அதோடு நிறுத்திக் கொண்டு திரும்ப கேமராவோடு மக்கள் கூட்டமும் திரும்பி இருந்தது.

சின்னு வேகமாக செடிக்கு அருகில் கிழிந்த இலையைப் போட்டு தனது இலையில் இருந்த பிரியாணியில் பாதியை- டைகருக்காக வைத்து இருந்தாள். டைகர் அதை முகரத் துவங்கி இருந்தது. சின்னு தனது இலையில் இருந்து ஒரு கவளம் தான் எடுத்து வாயில் வைத்து இருப்பாள். திடீரென இடித்த இடி அவளை அதிர்ச்சிக்குள் ஆக்கியது. அதோடு சடசடவென மழை கொட்ட ஆரம்பித்து இருந்தது. மழையில் தனது டைகரைக் காக்க அதை இழுத்துக் கொண்டு வீட்டு ஓரம் இருந்த சன்சேடுக்கு கீழே ஓடிக் கொண்டு இருந்தாள் சின்னு. சில வினாடிகளில் பிரியாணியும், கறியும், இலையும் மழை நீரில் மிதந்து கொண்டு சின்னுவின் காலடியில் வந்து கொண்டு இருந்தன.

டிஸ்கி : இது குறும்படத்திற்கான திரைக்கதை போல் நினைத்து எழுதியது.

Read more...

Sunday, December 20, 2009

திருடி நம்பர் ஒன்

பேருந்தில் ஏறி அமர்ந்ததும் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டேன். ஓரளவு இருக்கைகள் நிறைந்து இருந்தன. அரை மணி நேரப் பயணம் தான். மதுரையில் இருந்து வரும் வண்டியில் தான் இருக்கை கிடைக்கும் என்பதால் அந்த தனியார் வண்டியில் ஏறி இருந்தோம். இருவர் அமரும் சீட்டில் மகளை வைத்துக் கொண்டு மனைவி ஜன்னல் ஓரம் அமர்ந்திருக்க நான் உள்பகுதியில் அமர்ந்து இருந்தேன். மனைவி, குழந்தையுடன் செல்லும் போது எப்போதுமே கொஞ்சம் கவனமாக இருப்பது வழக்கம்.

வத்தலகுண்டு பேருந்து நிலையத்தை விட்டு வண்டி கிளம்பத் தயாராக இருந்த போது தான் முன் பகுதியில் அந்த பெண்மணி ஏறினாள். வண்டி முழுவதும் இருக்கைகள் நிறைந்து இருந்தன. நேராக என்னிடம் வந்த அவள் பின்னால் இருக்கும் மூவர் இருக்கையில் இருக்கும் ஒரு காலி இடத்தைக் கை காட்டி அங்கே போய் அமரச் சொன்னார். சுற்றும் முற்றும் பார்த்தால் ஒரு பெண் அமர்வது போன்ற இருக்கை ஏதும் காலி இல்லை. அந்த மூவர் இருக்கையில் ஏற்கனவே தடியான இரு ஆண்கள் அமர்ந்து இருந்தனர். வேறு வழி இல்லை.. மனைவியிடம் சொல்லி விட்டு மூவர் இருக்கைக்கு சென்றேன். அங்கிருந்த இருவருக்கும் இடையிலேயே எனக்கு இருக்கை கிடைத்தது.

இப்போது தான் அந்த பெண்மணியை நன்றாக பார்த்தேன். வயது 35 க்குள் இருக்கும். அவளது பார்வையே சரியில்லை. ஏனோ ஒரு திருட்டு முழி இருந்தது. என் மனைவியின் அருகே அமர்ந்தவள் என் மனைவியிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டு இருந்தாள். தெரியாவதவர்களிடம் என் மனைவி பேச மாட்டாள். அந்த பெண்மணி வம்படியாக பேச்சுக் கொடுப்பதாகவே எனக்குப் பட்டது.

அடிமனதில் பய ஓட்டம் ஆரம்பித்து இருந்தது. சென்ற வாரம் மனைவியின் ஊரில் இதே போல் பேருந்தில் அருகே அமர்ந்த பெண்ணிடம் திருடி விட்டு கம்பி நீட்டிய பத்திரிக்கை செய்தி ஏனோ நினைவுக்கு வந்தது. கழுத்தில், காதில் நகை போட்டிருக்கின்றாள். இரண்டு ஆண்டுகளில் நான்காவது முறையாக மாற்றப்பட்ட வளையல்களை வேறு போட்டு இருக்கிறாள். அதை நினைத்ததும் இன்னும் டென்சன் அதிகமாக ஆரம்பித்து இருந்தது. நகையின் எடையில் எந்த மாற்றமும் இல்லாமல், மாற்றிக் கொண்டு வந்ததன் மூலம் பல ஆயிரம் ரூபாய்களை விழுங்கி இருந்தவை அந்த வளையல்கள். என் அம்மாவிடம் திட்டு வாங்க முடியாது என்பதால் நெக்லஸை வேறு போட்டுக் கொண்டு வந்து இருக்கிறாள்.

அந்த பெண்ணுடன் என் மனைவி பேச ஆரம்பித்து இருப்பது தெரிந்தது. என்ன இவள்? பஸ்ஸில் ஏறி அமர்ந்ததும் யாரென்றே தெரியாத பெண்ணுடன் எப்படி பேசிக் கொண்டு இருக்கிறாள். எரிச்சலாக வந்தது. பேருந்து நிலையத்தை விட்டு பேருந்து வெளியேறும் நேரம் 20 பேருக்கு மேல் நின்று கொண்டு வந்தனர். அவர்கள் வேறு பார்க்க விடாமல் மறைத்துக் கொண்டு இருந்தனர்.

இடையில் கிடைத்த கேப்பில் பார்த்த போது, இப்போது அந்த பெண்மணியின் மடியில் என் மகள். பஸ்ஸில் அமர்ந்ததும் தூங்கி விடுவாள். எப்படி கொடுத்தாள் இவள்? கோபம் முட்டிக் கொண்டு வந்தது. மகள் கழுத்தில் செயினும், காலில் தங்க கொழுசும் உள்ளது.

வண்டி தேவதானபட்டியைக் கடந்து இருந்தது. ஆட்கள் இன்னும் ஏறி வண்டி நிறைந்து இருந்தது. கொஞ்சம் எழுந்தே பார்க்க முடிந்தது. நான் பார்ப்பதைக் கூட கவனியாமல் இருவரும் முழு அரட்டையில் இருந்தனர். பதற்றம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. என்ன நடக்குமோ என்று .. எதுவாக இருந்தாலும் அந்த பெண் இறங்கும் போது மனைவியிடம் சென்று நகைகளை சரிபார்க்க சொல்ல வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன்.

பெரியகுளம் பேருந்து நிலையத்திற்கு முன் உள்ள நிறுத்தத்திலேயே அந்த பெண் இறங்க நாங்கள் பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும். வேகமாக அந்த பெண் என்னை சிரிப்புடன் பார்த்துக் கொண்டே இறங்கிச் செல்ல என்னை அடுத்த இருந்த ஆளை முட்டித் தள்ளி மனைவியின் இருக்கையை அடைவதற்குள் அந்த பெண் இறங்கி, வண்டியும் கிளம்பி இருந்தது.

காதுக்கு அருகில் சென்று திட்ட ஆரம்பித்து இருந்தேன்.. மனைவியின் முகத்தில் ஒரே சிரிப்பு.. ”என்னங்க நீங்க... அவங்க உங்க அப்பாவோட பிரண்டு பிரான்ஸிஸ் அங்கிள் மகள்.. நம்ம கல்யாணத்து கூட வந்து இருந்தாங்களே? ”

“அப்படியா? நான் கவனிக்கலியே” என்றேன் பரிதாபத்துடன்.. “ ஆமா.. கல்யாணத்து அன்றைக்கு யாரைத் தான் பார்த்தீங்க.. பலி ஆடு மாதிரி தானே முழிச்சுக்கிட்டு இருந்தீங்க..” மனைவி சொல்ல உண்மையில் ‘ஙே’ என்று விழித்துக் கொண்டு இருந்தேன்.

Read more...

About This Blog

About This Blog

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP